ஒரு சிறிய கேள்வி

பள்ளி நாட்களில் இருந்தே நான் சில தொழில் நகரங்களை உன்னிப்பா கவனிச்சிகிட்டு இருக்கேன். அந்த நகரங்களில் வேலை கிடைக்கணும் என்பது 90களில் எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு கனவா இருந்தது. அங்க இருந்த பிரபலமான கம்பெனிகள் எல்லாம் தொடர்ந்து வளர்ந்து, இந்தியாவை வல்லரசா மாற்றும்னு எல்லோரும் எதிர்பார்த்தோம்.

2009-10-ம் ஆண்டில் கோவையில் சிறு தொழில் நிறுவனங்களுக்குலீன் மேனுபேக்சரிங் (Lean Manufacturing) முறையை நடைமுறைப் படுத்துவதற்காகப் போயிருந்தேன். அதில் பல நிறுவனங்கள் 20 வருசமா இருப்பவை; சில இரண்டாம் தலைமுறை நிறுவனங்கள்.

மேலும் சில ஆண்டுகள் அந்த நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. சில நாட்களிலேயே, அந்தக் கேள்வி என் முழுநேரச் சிந்தனையாக மாறியது. அந்தக் கேள்வி உதித்த நாளிலிருந்து என் தொழில் வாழ்க்கையே பெருமளவு மாறியது.

நான் படிக்கிற விஷயங்கள், நான் ப்ளாக்-இல் எழுதும் கட்டுரைகள், மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்கும் இந்தக் கேள்வியே மையப் புள்ளியாக இருந்தது. அந்தக் கேள்வியைப் பற்றி ஒரு முறையாவது யோசிக்காமல் நான் ஒரு நாளும் தூங்கியதில்லை.

நான் அந்தக் கேள்வியையே என் தொழில் வாழ்க்கையின் நோக்கமாகத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அது என்னை ஆக்கிரமித்தது.

சிறு நிறுவனங்கள் ஏன் பல ஆண்டுகளாக சிறியதாகவே இருக்கின்றன?

இந்தக் கேள்விக்கு பதிலைக் கண்டுபிடிக்க எனது தேடல் பல ஆண்டுகள் தொடர்ந்து. இந்த ஆராய்ச்சி எனக்கு பிரச்சனையைப் பற்றி ஓர் ஆழமான புரிதலைக் கொடுத்தது. அதற்கான மூல காரணங்களும் எனக்குத் தெரியவந்தன.

அவற்றுள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆறு காரணங்கள் மிக முக்கியமானவையாக நான் கருதுகிறேன்.

ஒரு தொழில் முனைவோர் -

  1. அவரது கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதில்லை,
  2. இயல்பான ஆர்வங்கள் பற்றி அறியாமல் இருக்கிறார்,
  3. தனது இலக்குகளை அடைய போதிய நேரமும், பலமும் இல்லாமல் இருக்கிறார் 
  4. வணிக வளர்ச்சியின் ஆறு இயற்கை நிலைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்,
  5. நிதி ஒழுக்கம் மற்றும் திட்டமிடல் இல்லாமல் இருக்கிறார் மற்றும்
  6. சரியான கேள்விகளைக் கேட்பதை விட்டு பதில்களை மட்டுமே தேடுகிறார்.

நீங்கள் ஆனந்தமான தொழில் முனைவோரா?

ஒரு தொழில் முனைவோரின் போராட்டம் 

ஒரு தொழில் முனைவோர் தனது வாழ்வின் உயர்ந்த இலட்சியத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்குகிறார். ஆரம்ப நாட்களில் சில போர்களில் வென்று, மகிழ்ச்சியாக அவர் பயணத்தைக் தொடர்கிறார்.

ஆனால், சில வருடங்களில் தனது ஆற்றல் குறைந்துபோய், போதிய படைபலம் இல்லாமால் பாதியிலேயே உழலத் தொடங்குகிறார். கண் திறந்து பார்ப்பதற்குள் அவர் தனது மகிழ்ச்சியையும், நோக்கத்தையும் மறந்து விட்டிருக்கிறார். நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் இருப்பதாக உணர்கிறார். ‘வரும்… ஆனா வராது’ என்பது போல் அவரது கனவுப் பயணமும், போய்சேர நினைத்த ஊரும் கண் முன்னே வந்து வந்து போகின்றன. 

மீண்டும் தான் அதே போர்க்களத்தில் இருப்பதை உணர்கிறார் - பல ஆண்டுகளுக்கு முன் அவர் வெற்றி பெற்ற ‘நடுத்தர சிந்தனைகளுக்கு எதிரான போர்க்களத்தில்’.

அவரது தளபதிகளைத் தன் வழிக்குக் கொண்டுவந்து, சுலபமாக வெற்றிபெறவைக்க அவர் முயற்சிக்கிறார். ஆனால், தளபதிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள் - மாற மறுக்கிறார்கள். சுவரில் மோதுவது முட்டாள் தனம் என்று புரிந்த அவர், தளபதிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை நிறுத்தி அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். அதனால் போர்க்களத்தில் அவரது தளபதிகள் அவரைச் சுற்றி இருந்தாலும் அவர் நிர்கதியாகவே உணர்கிறார். 

இன்று, அவர்களையும் சேர்த்துப் பாதுகாக்க வேண்டிய கூடுதல் சுமையுடன் அவர் போர்க்களத்தில் இருக்கிறார். அவரது உள்ளார்ந்த போராட்ட குணம் அவரைத் தொடர்ந்து போராட வைத்திருக்கிறது. ஆனால், தினமும் அவர் முடிக்கப்படாத வேலைகளின் சுமையுடன் இரவுக்குள் செல்கிறார்.

ஆனாலும், அவர் தனது இலக்கை அடையும் அந்த மகிழ்ச்சியான நாளைப் பற்றி அவ்வப்போது நினைத்துப் பார்க்கிறார்.